கூட்டுத்தலைமைக்குப் பலன் இருக்குமா? - அதிமுக: விறுவிறுப்பான அரசியல் திரில்லர்!

கூட்டுத்தலைமைக்குப் பலன் இருக்குமா? - அதிமுக: விறுவிறுப்பான அரசியல் திரில்லர்!
Published on

We shouldn't be looking for heroes, we should be looking for good ideas. ― Noam Chomsky

அதிகாரத்துக்கான போட்டி என்பது மனிதகுலம் உருவான காலத்தில் இருந்தே தொடர்ந்துவருகிற ஒரு விஷயம்தான். வலியது வாழும் என்பது டார்வின் உருவாக்கிய இயற்கை விதி. சிறந்தது வாழவேண்டும் என்று நாம் நினைத்தால்கூட வலியதுதான் வாழும். துரதிருஷ்டவசமாக ஜனநாயகத்திலும் அதுவே நிகழ்கிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் நிகழும் குழப்பங்களையும் இதனால் தமிழக மக்கள் குழம்பி, வெறுத்துப் போயிருப்பதையும் பார்த்தால் என்னதான் நடக்கிறது? இதற்கு யார்தான் காரணம் என்று எண்ணத் தோன்றுகிறது.

தனி நபர்களின் கவர்ச்சியை நம்பி உருவாக்கப்படும் எந்த அமைப்புக்கும் இதுதான் நிலை. ஜெயலலிதா என்ற ஒற்றை பிம்பம். அதற்கு முழுமையாகப் பணிந்து நின்ற தொண்டர்கள். இதுதான் அதிமுகவில் கடந்த இருபது ஆண்டுகளாக இருந்துவந்த காட்சி. இரண்டாம் கட்டத் தலைவர்கள் என்றோ, தனக்குப் பின் அரசியல் வாரிசு என்றோ ஜெயலலிதா யாரையும் அடையாளம் காட்டவில்லை.

தன் உடன் இருந்த தோழி சசிகலாவை நிழலாக அதிகாரம் செலுத்த அனுமதித்தாரே தவிர, வெளிப்படையாக எந்த பதவிக்கும் நியமிக்கவில்லை.  கட்சியில் எல்லாமுமாக நான்கு சுவர்களுக்குள் மட்டுமே இருந்த சசிகலா, ஜெயலலிதாவின் மரணம், உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றுக்குப்  பின்னால் ஏதும் செய்ய இயலாதவர் ஆகிப்போனார். ஜெயலலிதா, தனக்குப் பின் சசிகலாதான் என்று நினைத்திருந்தால் அவருக்கு முன்பே பதவிகள் கொடுத்து வெளிப்படையாகச் செயல்பட வாய்ப்புகள் கொடுத்திருக்கவேண்டும். இதில் ’வெளிப்படையாக’ என்ற சொல் மிக முக்கியம். ஜனநாயகத்தில் எவ்வளவுதான் அடிமைகள் கிடைத்திருந்தாலும் வெளிப்படைத்தன்மைக்கு ஒரு மரியாதை உள்ளது. இது அதிமுகவில் இல்லாததால்தான் ஜெவின் மரணத்துக்குப் பின் இன்னொரு ஜெயலலிதாவாக தலைமுடி, உடை அலங்காரங்களுடன் சசிகலா தோன்றியபோது அவரை உடனடியாக பொதுமக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய முதிர்ச்சி இன்மையாகவே இந்த தோற்றமாறுதல் விமர்சகர்களால் பார்க்கப்பட்டது. பொது மக்களால் அதிகாரத்தைக் கைப்பற்ற அவர் அவசரப்படுவதாக அது புரிந்துகொள்ளப்பட்டது! ஆனால் கட்சியின் மற்றும் ஜெயலலிதாவின் எல்லா சொத்துக் களிலும் பங்குதாரர், எல்லா நடவடிக்கைகளிலும் பங்குகொண்டவர், கட்சியின் பிரசார அமைப்புகளான செய்தித்தாள், தொலைக்காட்சியை வைத்திருப்பவர் தன்னை ஜெயலலிதாவின் வாரிசாக முன்வைத்திராமல் என்ன செய்திருக்க முடியும்? அவர் வேறு யாரை முன் வைத்திருக்கமுடியும் என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

எம்ஜிஆரிடம் இருந்து பலவற்றைக் கற்றுக்கொண்ட அதிமுக தலைமை, தனக்குப்பின் என்று சிலரை அவர் அடையாளம் காட்டியதைக் கற்றுக்கொள்ளவில்லை. ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் அவர் தந்த முக்கியத்துவம் இந்த திசையிலேயே இருந்தது. ஆர்.எம்.வீ, ஜானகி அம்மையாரை முன்வைத்து அதிமுகவை கைப்பற்ற முயன்றார். ஜெ. சுயமாக முயன்று அதிமுகவைக் கைப்பற்றுவதில் வெற்றிபெற்றார். இவர் பின்னால் தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டார்கள். எம்ஜிஆர் தன் சொத்துக்கள் யாருக்கு என்பதுவரை உயில் எழுதி வைத்திருந்தார். ஜெவிடம் இந்த திட்டமிடல் கூட இல்லாமல் போய்விட்டதாகவே தோன்றுகிறது.

எல்லாக் கட்சிகளிலும் தலைமையின் மறைவுக்குப் பின்னர் குழப்பங்கள் ஏற்படுவது இயல்பே. 1969-ல் அண்ணா மறைவுக்குப் பின் ஆட்சிக்குத் தலைமை ஏற்பது யார் என்ற கேள்வி எழுந்தபோது, தகுதியான தலைவர்களாக பலர் இருந்தனர். அவர்களில் வல்லவரான மு.கருணாநிதி வென்று தலைமைப்பதவியைக் கைப்பற்றினார். குழப்பங்கள் தீர்ந்தன. எம்ஜிஆர் இறந்தபோதும் இதே நிலைதான். அவரது மனைவி ஜானகியை முன்வைத்து ஓரணியும் ஜெயலலிதாவை முன்வைத்து இன்னொரு அணியும் போட்டியிட்டன. இரு தரப்புக்குமே ஓரளவு வலிமையும் மக்கள் ஆதரவும் இருந்தது. அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு, பெரும் போராட்டத்துக்குப் பின்னர் ஜெயலலிதாவின் பின்னால் அனைவரும் ஒன்றிணைந்தனர்.

ஆனால் இன்றைய நிலைபோல் மத்தியில் ஆளும் கட்சியிடம் போய் எல்லாவற்றும் ஆலோசனை கேட்பது போன்ற நிலை இல்லை! அன்றைக்கு குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் ஜெ.அணிக்கு ஆதரவு காட்டியதாகச் சொல்லப்பட்டதைத்தவிர.  ஆனால் இப்போதோ ஜெ.மருத்துவமனையில் இறந்த மறு கணத்திலிருந்து கட்சிக்கு வழிகாட்டிகள் டெல்லியில் இருந்து வர ஆரம்பித்தார்கள். எதற்கெடுத் தாலும் அழைப்பின்றியே டெல்லிக்குச் சென்று ஆஜர் ஆகும் நிலை!

மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஒரு குடும்பத்தினரையே தலைவராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது! அங்கு அடுத்த தலைவர் யார் என்பதற்கு எப்போதுமே பதில் இருந்துவருகிறது! ஒவ்வொரு கட்டத்திலும் வலிமையான தலைவர்களைக் குடும்பத்திலிருந்தும் சிலகாலம் நரசிம்மராவ் போல் குடும்பத்துக்கு வெளியிலிருந்தும் அக்கட்சி கண்டடைகிறது!

மாநிலங்களில் இயங்கும் கட்சிகள் பெரும்பாலும் குடும்ப ஆட்சிமுறையைக் கொண்டிருக்கின்றன! தலைவருக்குப் பின் அவரது மகன் பதவிக்கு வருகிறார்! ஒரிசாவில் நவீன் பட்நாயக்காக இருக்கட்டும்! ஆந்திராவில் மருமகன் சந்திரபாபு நாயுடு, ராஜசேகர ரெட்டிமகன் ஜெகன், கர்நாடகத்தில் குமாரசாமியாக இருக்கட்டும் இதுதான் வழிமுறை! காஷ்மீரத்தில் மெஹ்பூபா முக்தி, ஓமர் அப்துல்லா, உபியில் அகிலேஷ் யாதவ், பிஹாரில் லாலுவின் மகன்கள், மும்பையில் தாக்கரேக்கள், தேசியவாத காங்கிரஸில் சுப்ரியா சுலே என்று இந்தப்பட்டியல் நீளும். நம் மாநிலத்தில் திமுகவில் மு.க.ஸ்டாலின்! ஆனால் இங்கெல்லாம் வாரிசுகள் அடையாளம் காட்டப்பட்டு, தலைமைக்குப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்! இந்தியாவில் மட்டுமில்லை! தெற்காசியாவில் எல்லா நாடுகளிலும் பொதுவாக இந்த நிலை அரசியலைப் பொறுத்தவரை நிலவுவதைக் காணமுடியும்!

பாஜகவில் இந்தக் குடும்பப்பிரச்னை என்றுமே இருந்தது இல்லை! ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் தலைவர்கள் உருவாகிறார்கள்! தேர்வு செய்யப்படுகிறார்கள்! வயதானவர்கள் எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும் மென்மையாக ஒதுக்கப்படுகிறார்கள்! இன்றைக்கு அத்வானி ஒதுக்கப்பட்டிருக்கலாம்! நாளைக்கு இன்றைய தலைவரும் தன் செல்வாக்கு ஓய்ந்ததும் மெல்ல ஒதுக்கப்படுவார்! புதியவர்  செல்வாக்குடன் தலையெடுப்பார்!

குடும்பத்தில் வாரிசு இல்லாத வலிமையான தலைவர்கள், தங்கள் குடும்பத்தினரை அரசியலுக்குக் கொண்டுவராத தலைவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள்! அதற்கு வாழும் உதாரணங்களாக பகுஜன் சமாஜின் மாயாவதி, திருணாமுல் காங்கிரசின் மமதா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தளத்தின் நிதீஷ்குமார், ஒடிஷாவின் நவீன் பட்நாயக் போன்றவர்கள். இவர்களின் கட்சியே ஜனநாயக முறைப்படி அடுத்த தலைவரைத் தேர்வு செய்யும் அளவுக்கு வலிமையாக இருந்தால்தான்  நீடிக்கும்! அதிமுக என்கிற  கட்சிக்கு முன்னால் இருப்பதும் அந்தச் சவால்தான்! அக்கட்சியின் வலிமையான தலைவி, தனக்குப் பின்னால் யார் என்று யாரையும் உருவாக்காமல் போய்விட்டார்! அல்லது அடையாளம் காண்பிக்காமல் போய்விட்டார்! அப்படியொரு தலைமையை அக்கட்சி தேடிக்கொண்டிருக்கிறது! அந்தத் தேடலில் அக்கட்சி இன்று  மூன்றாக உடைந்திருக்கிறது! கூவத்தூரிலும் புதுச்சேரியிலும் தலைவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறது!

அதிமுக என்ற கட்சியை திராவிடக் கட்சி என்று ஏற்றுக்கொள்ளத் தயங்கும் பலர் இருக்கலாம். அதன் ஒற்றைமய அதிகாரத் தலைமையைக் கண்டு முகம் சுளித்தவர்கள் இருக்கலாம்!  ஹெலிகாப்டரின் நிழலையும் கார் நிழலையும் வணங்கும் அதன் தலைவர்களைக் கண்டு நெளிபவர்கள் இருக்கலாம்! ஆனால் திராவிட அரசியலில் அது தன் வரலாற்றுக்கடமையை இன்றுவரை ஆற்றியிருக்கிறது! அதன் முக்கியமான சாதனை எழுபதுகள் வரை திமுக- காங்கிரஸ் என்று இருந்த அரசியல் போட்டியை திமுக  அதிமுக என்று மாற்றி அமைத்ததே. இதன் மூலம் தேசியக் கட்சியான காங்கிரசை மூன்றாம், நான்காம் மற்றும் முக்கியமற்ற இடத்துக்கு அது தள்ளிவிட்டது! வேறெந்த தேசியக் கட்சியும் தமிழகத்தில் வேர்விட்டுவிடாமல் 45 ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்டது. சரியோ தவறோ, மாநிலத்தின் முதல்வர் தமிழ்நாட்டுக்காரராகவே இருந்தார். முக்கிய முடிவுகளை அவரே எடுத்தார்.டெல்லியிலிருந்து கட்டளைகளை அவர் எதிர்பார்க்கத் தேவை எதுவும் இல்லை! டெல்லியின் விருப்பங்களுக்கு ஏற்ப இங்கே முதல்வர்களை மாற்றி அமைக்க முடியாது! வலிமையான மாநிலத் தலைவர்கள்  உருவாவதை தேசியக் கட்சியினர் ரசிப்பதே இல்லை!

இந்நிலையில் மாநில சுயாட்சியின் முக்கியமான கூறு, தெரிந்தோ தெரியாமலோ தமிழ்நாட்டில் நிலவுவதற்கு அதிமுகவின் பங்களிப்பு மிகமுக்கியமானது! திராவிடக் கருத்தியலின் கூறுகளின் படி (சில சமரசங்களுடன் தான்) நடந்த ஆட்சி, வட இந்தியாவுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சிக்கே வித்திட்டது!

எப்போதும் டெல்லியில் வாழும் அரசியல் தலைவர்கள்தான் தங்கள் அரசியல் தேவை என்று வரும்போது சென்னைக்கு வந்து அதிமுக தலைமையை சந்தித்துப்போயிருக்கிறார்கள்! இவர் போனது இல்லை! இதே நிலைமைதான் திமுகவிலும். கூட்டணி பேச்சுக்காக டெல்லித் தலைவர்கள் சென்னைக்குத்தான் வரவேண்டும்!

அதிமுக, திமுக இந்த இரு கட்சிகளும் ஒருகட்டத்துக்குப் பின்னால் தங்கள் ’சர்வைவலுக்கு ’ பிற கட்சியைத்தான் நம்பி இருந்தன. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை என்பதுதான் வெளிப்படையாகப் பேசப்படாவிட்டாலும் எதார்த்தம்!! இன்றைய குழப்பத்தில் அதிமுக காணாமல் போனால், அதன் இடத்தை எந்த தேசியக் கட்சி எடுத்துக்கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்! இதை அதிமுகவினர் உணர்ந்திருக்கிறார்களோ இல்லையோ திமுகவினர் உணர்ந்திருக்கவேண்டியது மிக அவசியம்!

மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சொன்ன சம்பவம் இது! பல ஆண்டுகளுக்கு முன்பாக அதிமுக ஜெ-ஜா என்று பிரிந்து நின்று பிரச்னைகளை சந்தித்த நேரம். ஜெயலலிதாவை முன்னிறுத்தி தாங்கள் கட்சியை வழி நடத்தலாம் என்று அதிமுகவில் சில மூத்த தலைவர்கள் நினைத்திருந்தார்கள்.  அப்போது ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு. அப்போது மூத்த தலைவரான நெடுஞ்செழியன், ஜெயலலிதா பொதுச்செயலாளராகச் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவித்தார். அடுத்த கேள்வியை யாரோ நிருபர் கேட்டார்கள். அதற்கும் நெடுஞ்செழியனே பதில் சொல்ல முனைந்தார். குறுக்கிட்ட ஜெயலலிதா, நான் தான் பொதுச்செயலாளர். இனி நானே பதில் சொல்கிறேன் என்று மைக்கை வாங்கிக்கொண்டார். இங்கே பாஸ் யாரென்று உணர்த்திய செய்கை அது! அதிமுகவில் அப்போது கூட்டுத்தலைமை பற்றியெல்லாம் பேசப்பட்டு, நால்வர் அணி ஒன்று ஜெ உடன் இருந்தது. அந்த நால்வர் அணியை ஒரு கட்டத்தில் கட்சியை விட்டு விலக்கினார். ஒற்றைத் தலைமை என்று ஆனது. அதுதான் அதிமுக தொண்டர்களுக்கு இயல்பான ஒன்று. அவர்கள் வலிமையான  ஒற்றைத் தலைமைக்கே கட்டுப்பட்டவர்கள். கூட்டுத்தலைமைகள் அவர்களுக்கு சரிவராது. இன்றைய அதிமுகவுக்கும் அது பொருந்தும். அத்தகைய வலிமையான தலைமையை யார் தரப்போகிறார்கள்?    

செப்டெம்பர், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com